VPF கட்டணத்தை கட்டமாட்டோம்...!! தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட மாட்டாது; இயக்குனர் பாரதிராஜா அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட மாட்டாது தயாரிப்பாளர் சங்க தலைவர் இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பிரிந்து ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ உருவானது. இதன் தலைவராக பாரதிராஜா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். தலைவரான சில தினங்களில், இனிமேல் வி.பி.எஃப் கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் கட்டமாட்டோம் என்று தெரிவித்தார். இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். ஆனால், திரையரங்குகள் மூடியிருந்த சமயத்தில் இந்த விஷயங்கள் நடந்ததால் அதோடு முடிக்கப்பட்டது. தற்போது நவம்பர் 10-ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன.

தீபாவளிக்குச் சில படங்களும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் இது தொடர்பான ஒரு அறிக்கையை பாரதிராஜா வெளியிட்டார். அதில், ”தயாரிப்பாளர்கள்‌ அனைவரும்‌ ஒருங்கிணைந்து வெளியிட்டிருந்த கோரிக்கைகளில்‌ ஒன்றைக் கூட திரையரங்க உரிமையாளர்கள் ஏற்றுக்‌கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளதால்‌, நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தயாரிப்பாளர்களும்‌ ஒருங்கிணைந்து, வி.பி.எஃப் கட்டணத்திற்கு ஒரு முடிவு வரும்‌ வரை தங்களின்‌ புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளோம். இந்த வி.பி.எஃப் கட்டணப்‌ பிரச்சினைக்கு முடிவு எட்டும்‌ வரை, அனைத்துத் தயாரிப்பாளர்களும்‌, தங்களின்‌ புதிய படங்களின்‌ வெளியீட்டுத் தேதியை தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்தோசித்து முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று பாரதிராஜா தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் – திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே பல முறை பேச்சுவார்த்தை நடந்தும் சரியான முடிவை எட்டவில்லை. இந்நிலையில் VPF கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்தால் தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகாது என தயாரிப்பாளர் சங்க தலைவர் இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. நல்ல தீர்வு ஏற்படும் வரை புதிய படங்களை வெளியிட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். களத்தில் சந்திப்போம், பிஸ்கோத், எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தன.

Related Stories: