பாம்பன் கடலில் 10 நாளில் மூன்றாவது சம்பவம்: கிரேன், ஜெனரேட்டருடன் மூழ்கியது மிதவை மேடை

ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கிரேன் மற்றும் ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட மிதவை மேடை நேற்று கடலில் மூழ்கியது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்திற்கு அருகில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்காக கடலில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கிரேன், கலவை இயந்திரம், ஜெனரேட்டர், துளையிடும் கருவி பொருத்தப்பட்ட மிதவை மேடைகள் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. கட்டுமான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள மிதவை மேடைகள் கடல் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பாம்பன் ரயில் பாலத்தின் தூண்களில் மோதி நிற்பது, தண்டவாளம் பொருத்தப்பட்ட இரும்பு கர்டரில் மோதி சிக்கிக்கொள்வது, கடல் சீற்றத்தால் மூழ்குவது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன.

கிரேன் மற்றும் ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட மிதவை மேடை ஒன்று நேற்று காலை கடல் நீரோட்டம் காரணமாக ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியது. இதில் உள்ள ஜெனரேட்டரை மீட்கும் நடவடிக்கையில் கட்டுமான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் கூறுகையில், ‘‘பாம்பன் புதிய ரயில்பால கட்டுமான பணியில் கடந்த 10 நாட்களில் மூன்று முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் ரயில்வே பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இவ்விஷயத்தில் போதிய கவனம் செலுத்தாததால், அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன’’ என்றனர்.

Related Stories: