நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் ஜனவரி முதல் பாஸ்டேக் கட்டாயம்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: ‘நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் அடுத்தாண்டு ஜனவரி முதல் பாஸ்டேக் கட்டாயம்,’ என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், எரிபொருள் மட்டுமின்றி கால விரயமும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘பாஸ்டேக்’ மூலம் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்தது.

இதன் மூலம், சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களிடம் இருந்து தானாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும். இதன் மூலம் கால நேரம், எரிபொருள் விரயம் ஆவது மிச்சமாகும். வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்ட் டேக் அட்டையில் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல முடியும். முதலில் இந்த பாஸ்டேக் நடைமுறை பரிசோதனை முயற்சியாக, 2014ம் ஆண்டு அகமதாபாத் - மும்பை இடையே தங்க நாற்கர சாலையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2014 நவம்பர் 4ம் தேதி டெல்லி - மும்பை இடையே தங்க நாற்கர சாலையில் நடைமுறைக்கு வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதியில் இருந்து, அனைத்து தேசிய நெடுங்சாலைகளிலும் பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்படுவதாக, கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என் பிரிவு 4 சக்கர வாகனங்களுக்கும் இனிமேல் 2021, ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்படுகிறது. மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி, 4 சக்கர வாகன உற்பத்தியாளர்கள், டீலர்களிடம் புதிதாக 4 சக்கர வாகனங்களைப் பதிவு செய்யும்போதே ‘பாஸ்டேக்’ எண்ணை அளிப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

4 சக்கர வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் (பிட்னஸ் சர்டிபிகேட்) பெறும்போது, கண்டிப்பாக பாஸ்டேக் வைத்திருக்க வேண்டும். பாஸ்டேக் வைத்திருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச்சான்று தரப்படும். 2019, அக். 1ம் தேதியிலிருந்து நேஷனல் பெர்மிட் வாகனங்கள் அனைத்துக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காப்பீடுச் சட்ட திருத்தத்தின்படி, வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பெறும்போதும் கண்டிப்பாக பாஸ்டேக் அட்டை வைத்திருக்க வேண்டும். காப்பீடு எடுக்கும்போது, பாஸ்டேக் அடையாள எண்ணை அளிப்பதும் கட்டாயம். இந்த நடைமுறை மட்டும் 2021, ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். பாஸ்டேக் நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டு இருப்பதன் மூலம், சுங்கச் சாவடிகள் 100 சதவீதம் மின்னணு முறையில் செயல்படும். அடுத் இரு மாதங்களுக்குள் 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் பாஸ்டேக் அட்டையை வாகனத்தில் ஒட்டிக் கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* 2014ம் ஆண்டு, அகமதாபாத் - மும்பை இடையே தங்க நாற்கர சாலையில் சோதனை முயற்சியாக பாஸ்டேக் அறிமுகம்.

* 2015ம் ஆண்டு ஜூலையில் இருந்து, சென்னை - பெங்களூரு இடையே உள்ள தங்க நாற்கர சாலையில், பாஸ்டேக் மூலம் கட்டணம் ஏற்பு.

* 2016 ஏப்ரலில் தேசிய நெடுஞ்சாலைகளில் 247 சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் நடைமுறைக்கு வந்தது.

* 2016ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி முதல், 347 சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள், பாஸ்டேக் மூலம் கட்டணம் ஏற்க துவங்கின.

* 2017 டிசம்பருக்கு பிறகு விற்கப்படும் புது வாகனங்களில் பாஸ்டேக் பொருத்துவது கட்டாயம் ஆனது.

* தற்போது 2017 டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பு விற்கப்பட்ட எம் மற்றும் என் பிரிவு 4 சக்கர வாகனங்களுக்கும், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பாஸ்டேக் கட்டாயம் ஆகிறது.

Related Stories: