ராமேஸ்வரம்: பாம்பனில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை மேடை நேற்று அதிகாலை, கடல் சீற்றத்தினால் இழுத்து செல்லப்பட்டு பாம்பன் ரயில் பாலத்தில் மோதி சிக்கியது.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் இரட்டை வழித்தடத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. கடலுக்குள் கப்பல் செல்லும் மையப்பகுதியில் பாம்பன் கால்வாயின் இரண்டு பக்கத்திலும் மிதவை மேடை அமைத்து தூண்கள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் வீசிய பலத்த காற்றினால், தூண்கள் அமைக்கும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மிதவை மேடையுடன் கூடிய கிரேன், பாம்பன் ரயில் பாலத்தில் மோதியது. நேற்று அதிகாலை கடலில் நிறுத்தப்பட்டிருந்த மிதவை மேடை ஒன்று காற்றின் சீற்றத்தில் இழுத்து செல்லப்பட்டு, தூக்குப்பால கான்கிரீட் தூணில் மோதி சிக்கியது. நேற்று காலை கட்டுமான பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் படகில் சென்று கயிற்றினால் கட்டி, மிதவை மேடையை மீட்டு வேறு பகுதியில் இழுத்து சென்று நிறுத்தினர்.