குன்னூரில் சுருக்கு கம்பி வைத்து சிறுத்தை வேட்டை; 2 பேர் கைது

குன்னூர்:  குன்னூரில் தனியார் தேயிலை தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி பெண் சிறுத்தை உயிரிழந்தது. இதையடுத்து சிறுத்தையை வேட்டையாடியதாக 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை இறந்து கிடப்பதை உறுதி செய்தனர். வனத்துறையின் ஆய்வில் இறந்தது 5 வயது பெண் சிறுத்தை என்பதும், சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

சந்தேகத்தின் பேரில், கக்காச்சி பகுதியை சேர்ந்த முருகன் (38) மற்றும் கிளிஞ்சாடா பகுதியை சேர்ந்த செல்வன் (40) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், இருவரும் கடந்த பல மாதமாக சுருக்கு கம்பி வைத்து காட்டுபன்றி, மான், முயல் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது. காட்டு பன்றிக்கு சுருக்கு கம்பி வைத்ததாகவும், அதில் சிறுத்தை சிக்கி பலியானதாகவும் 2 பேரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து வனத்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுத்தையின் உடலை மீட்டதோடு, பிரேத பரிசோதனைக்கு பின் அதே பகுதியில் எரியூட்டப்பட்டது.

Related Stories: