2019ம் ஆண்டுக்கான தேசிய விருது நீர்மேலாண்மையில் தமிழகம் முதலிடம்: ஆறுகள் மறுமலர்ச்சி திட்டத்தில் வேலூர் மாவட்டத்திற்கு பரிசு

சென்னை: நீர் மேலாண்மையில் நாட்டிலேயே தமிழக அரசு முதல் இடத்தை பெற்றுள்ளது. ஆறுகள் மறுமலர்ச்சி திட்டத்தில் வேலூர் மாவட்டம் முதல் பரிசை பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலங்களுக்கான விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டுக்கான சிறந்த நீர் மேலாண்மையை மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலை மத்திய  அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. ேதசிய அளவில் தமிழகம் முதல் பரிசை பெற்றுள்ளது. இரண்டாவது இடம் மகாராஷ்டிர மாநிலத்திற்கும், 3வது பரிசு ராஜஸ்தான் மாநிலத்திற்கும்  வழங்கப்படவுள்ளது. ஆறுகள் மறுமலர்ச்சியில் சிறந்த மாவட்டங்களாக வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு வேலூருக்கு முதல் பரிசும், கரூருக்கு 2வது பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் பாதுகாப்புக்கான 2வது பரிசு  பெரம்பலூர் மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது. முதல் பரிசை தெலங்கானா மாநிலம் ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் பெற்றுள்ளது.

நீர் மேலாண்மையில் சிறந்த பஞ்சாயத்துகளில் தூத்துக்குடி மாவட்டம் சாஸ்தாவினாதூர் கிராமம் முதல் பரிசை பெற்றுள்ளது. சிறந்த நகர்புறத்திற்கான விருதில் மதுரை மாநகராட்சி 2வது இடத்தை பெற்றுள்ளது. முதல் பரிசு அந்தமான் போர்ட்  பிளையருக்கு வழங்கப்படுகிறது.நீர் பாதுகாப்பில் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக கோவையில் உள்ள மத்திய விவசாய பொறியியல் ஆராச்சி மையத்தின் ஹரி குப்புசாமி முதல் பரிசும், சென்னை ஐஐடியை சேர்ந்த டி.பிரதீப் 2ம் பரிசும்,  சுண்ணாம்பு கொளத்தூர் வாடெக் வபாட் நிறுவனம் 3வது பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பள்ளியில் புதுச்சேரி காட்டேரிகுப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலை பள்ளி முதல் இடத்தை பெற்றுள்ளது. தென் மண்டலத்தில் சிறந்த நீர் ேமலாண்மையில் முதல் பரிசு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  மணிகண்டனுக்கும், இரண்டாம் பரிசு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சக்திநாதன் கணபதிக்கும் வழங்கப்படுகிறது.

முதல்வர் பெருமிதம்

நீர் மேலாண்மையில் 2019க்கான சிறந்த மாநிலமாக ஜல்சக்தி அமைச்சகத்தின் விருதினை தமிழக அரசு பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது  டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீர் மேலாண்மையில் 2019க்கான சிறந்த மாநிலமாக ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய விருதினை தமிழக அரசு பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீர் நிலைகளை புதுப்பித்தலில் வேலூர், கரூர் மாவட்டங்கள் முதல் இரண்டு இடங்களையும்,  நீர்நிலைகளை பாதுகாப்பதில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தையும் பெற்றுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: