மேற்குவங்கத்தில் தங்களது பேச்சை கேட்காத ஐபிஎஸ் அதிகாரிகளின் மனைவிகளுக்கு நெருக்கடி : மத்திய அரசுக்கு மம்தா பகிரங்க எச்சரிக்கை

கொல்கத்தா, :அடுத்தாண்டு மேற்குவங்க மாநில பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை அப்புறப்படுத்த பாஜக தீவிரமாக களம் இறங்கி வேலை பார்க்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்ட நிலையில், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இருந்தும் முன்னாள் தேசிய தலைவரான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக பிரசார வியூகங்களை தொடங்கியுள்ளார். இதற்காக 12 சிறப்பு தலைவர்கள் தேர்தல் முடியும் வரை களப்பணியாற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. பீகார், ஜார்க்கண்ட், அசாம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா,  மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில மூத்த தலைவர்கள் மேற்குவங்கத்தில் முகாமிட்டு தேர்தல் பணியாற்ற உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையல், மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் மோதல்கள் அதிகரித்து வரும்நிலையில், நேற்று மாநில தலைமை செயலகத்தில் நிர்வாக மறுஆய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது மம்தா பேசுகையில், ‘பாஜக தலைமையிலான மத்திய அரசு, மாநில நிர்வாகத்திடம் கலந்து ஆலோசிக்காமல் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்ற செய்ய கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. மத்திய அரசு அதன் ‘லட்சுமண ரேகை’யைக் கடந்து தனது அரசியலமைப்பு கடமையை நிறைவேற்ற  வேண்டாம். காவல்துறை  அதிகாரிகள் அவர்களின் (மத்திய அரசின்) பேச்சைக் கேட்கவில்லை என்றால், அவர்களுக்கு  வருமான வரி அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

அல்லது அவர்களது மனைவிகளை (மேற்குவங்கத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள்) வேறு இடத்திற்கு இடமாற்றுவதாக அச்சுறுத்துகிறார்கள். ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமார், கொல்கத்தா போலீஸ் கமிஷனராக  இருந்தபோது, ​​அவரது மனைவி பஞ்சாப்புக்கு தூக்கியடிக்கப்பட்டார். இதுபோன்ற அரசியலை நாங்கள் பார்த்ததில்லை. எனவே  ஐஏஎஸ்  மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்’ என்று பேசினார்.

Related Stories: