தமிழகத்தில் தனியார் வேலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80% இடஒதுக்கீடு அவசர சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் தனியார் வேலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதை அவசர சட்டமாக பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரியானாவில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் அண்மையில் இத்தகைய சட்டம் இயற்றப்பட்ட நிலையில், அதேபோன்ற சட்டத்தை அரியானா அரசு நிறைவேற்றியிருக்கிறது. கர்நாடகம், மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களும் இச்சட்டத்தை நிறைவேற்றவுள்ளன.

புதிய பொருளாதார கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மத்திய, மாநில அரசு பணிகள் கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. அதனால் தனியார் நிறுவனங்களின் மூலமாக மட்டுமே தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு தேவைகளை நிறைவேற்ற முடியும். தென்னிந்தியாவில் கேரளம் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் மக்களுக்கு மட்டும்தான் தனியார் வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய சூழலில் தமிழக தனியார் வேலைவாய்ப்புகளை மட்டும் அனைவருக்கும் திறந்து விட்டால், தமிழக இளைஞர்கள் படித்த படிப்புக்கு வேலையில்லாமல் வறுமையில் தான் வாட வேண்டும். தமிழகத்தில் மிகச்சிறப்பான மனிதவளம் உள்ளது.

அதனால் அனைத்து பணிகளுக்கும் தகுதியான இளைஞர்கள் கிடைப்பர். அவ்வாறு தகுதியான ஆட்கள் இல்லை என்றால் கூட, படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து பணியமர்த்த வேண்டுமே தவிர, பிற மாநிலத்தவரை பணிக்கு அமர்த்தக் கூடாது என்ற பிரிவை சட்டத்தில் சேர்க்க வேண்டும். எனவே, தமிழ்நாட்டின் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காட்டை தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்க வகை செய்ய வேண்டும். இதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: