மருத்துவ மேற்படிப்பில் சீட் பிளாக்கிங் முறைகேடு: சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கியது

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் சீட் பிளாக்கிங் முறைகேடு தொடர்பாக முதல்கட்ட விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் காலியாக உள்ள இடங்களில் கலந்தாய்வு நடத்த கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் தகுதியில்லாத மாணவர்கள் பணம் கொடுத்து முறைகேடாக சேர்க்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு இடையே ஒத்துழைப்பு இல்லாமல் இதுபோன்ற முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் இல்லை என்பதால் இதுகுறித்து சிபிசிஐடி முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு கடந்த 28ஆம் தேதி உத்தரவிட்டது.

மேலும் நடப்பு கல்வியாண்டில் 74 மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததால் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழக சிபிசிஐடி போலீசார் மருத்துவ மேற்படிப்பில் சீட் பிளாக்கிங் முறையில் முறைகேடு தொடர்பாக முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக உதவி ஆணையருக்கு இணையாக உள்ள அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Related Stories: