ஆவணப்பதிவின் போது வருமானவரி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்: பத்திரப்பதிவுத்துறை தகவல்

சென்னை: ஆவணப்பதிவின் போது வருமானவரி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும் என பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை:  பொதுமக்கள் ஸ்டார் 2.0 ஆன்லைன் வழி ஆவணதாரர் விபரங்களை உள்ளீடு செய்யும் போது விற்பனை ஆவணத்தைப் பொறுத்து வருமான வரித்துறையின் படிவம் 60, 61-ஏ உள்ளீடு செய்ய வேண்டுகோள் பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டம் 2018ம் ஆண்டு 12.2.2018 அன்று துவக்கி வைக்கப்பட்டு தினமும் சராசரியாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் தங்கு தடையின்றி பதிவு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக  https://tnreginet.gov.in என்ற இணையதளத்தில் எளிய முறையிலான ஆவண உருவாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசதியைப் பயன்படுத்தி ஆவணதாரர்கள் விபரம் மற்றும் சொத்து தொடர்பான விபிரங்களை உள்ளீடு செய்து பொதுமக்களே ஆவணத்தை உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

வருமான வரிச்சட்டம் விதிகள் 1962 விதி 114(பி)ன் படி ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட விற்பனை ஆவணங்களை பொருத்து எழுதிக் கொடுக்கும் மற்றும் எழுதிப் பெறும் நபர்களின் வருமான வரி நிரந்தர கணக்கு எண் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும், வருமான வரிச்சட்டம், 1962 பிரிவு 285 பிஏ மற்றும் வருமான வரிச்சட்டம் விதிகள், 1962 விதி 114இ-ன்படி ரூ.30 லட்சத்திற்கும் மேற்பட்ட கிரைய ஆவணங்களின் விவரங்கள படிவம் 61ஏ-வில் வருமான வரித்துறைக்கு அளிக்கப்படுகிறது. ஆவணப்பதிவின் போது மேற்கண்ட படிவங்களை தாக்கல் செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. தற்போது படிவம் 60, 61-ஏ விபரங்களை இணையதள வழி உள்ளீடு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இனி வரும் காலத்தில் வருமான வரி சட்டம் மற்றும் விதிகளின் படி மேற்கண்ட விவரங்களை, ஆவண தயாரிப்பின் போதே, உள்ளீடு செய்ய இணையதள வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: