வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள துரித நடவடிக்கை: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைக் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மழைக்காலங்களில் ரயில் நிலையத்தின் சுற்றுப்புறங்கள், ரயில் நிலைய வளாகங்கள், ரயில் பெட்டிகள், உயர்மட்டப்பாதை மற்றும் சுரங்கவழிப்பாதைகள் உட்பட முக்கிய இடங்கள் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உரிய பாதுகாப்புடனேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் எதிர்பாராத இயற்கை நிகழ்வுகளை கணக்கில் கொண்டு ஒவ்வொரு வினாடியும் விழிப்புணர்வுடன் கண்காணிக்கப்பட்டு பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

எனவே, புயல் காலங்களில் காற்றின் வேகத்தை துல்லியமாக அளந்து தகவல் தரும் அனிமோமீட்டர் எனும் கருவிகள், மெட்ரோ ரயில் நிர்வாக கட்டிடம், விமானநிலையம், ஆலந்தூர் உட்பட முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. புயல் காலங்களில் காற்றின் வேகம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அதற்கு ஏற்ப செயல்படும் வகையில் ரயில் ஓட்டுநர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள். இதேபோல், மழைக்காலங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நிலைய கட்டுப்பாட்டாளர்கள் பல்வேறு நிகழ்வுகளை கண்காணித்து உடனுக்குடன் செயலாக்கக் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க பணிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: