வேறு எங்கும் இல்லை; கொடுமணல் அகழாய்வில் தமிழ் நெடில் எழுத்துகள் கண்டுபிடிப்பு: உயர்நீதிமன்ற கிளையில் தொல்லியல்துறை தகவல்.!!!

மதுரை: கொடுமணல் அகழாய்வில் தமிழ் நெடில் எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அருகே உள்ள கிழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் தாமிரபரணி  பகுதிகளில் பல்வேறு இடங்களில் மத்திய, மாநில தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு தொடர்ந்து நடத்தவும், அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பாதுகாக்கவும் பல்வேறு மனுக்கள்  உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் இன்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய தொல்லியல்துறை சார்பில் பல்வேறு தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக,  கொடுமணலில் நடத்தப்பட்ட அகழாய்வின்போது, தமிழில் உள்ள நெடில் ஆ, ஈ போன்ற எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு நெடில் எழுத்துகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற  அகழ்வாய்வில் எங்கும் தமிழில் நெடில் எழுத்துகள் கிடைக்கவில்லை. கொடுமணலில் தான் தமிழ் எழுத்துக்கள் கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக தமிழ் எழுத்துக்கள் கிடைக்கப்பட்டுள்ளது. உடனடியாக, 12 பொருட்களை கார்பன் டேட்டிங் சோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி  கிடைப்பெற்ற 12 பொருளை வயது, காலங்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இதனை ஆய்வகத்திற்கு அனுப்பும் செலவை தமிழக அரசு ஏற்று 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, கிழடி மற்றும் பல்வேறு  இடங்களில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளின் தற்போதைய நிலை என்ன?, அதிக கல்வெட்டுகள், எழுத்துகள் தமிழில் இருக்கும்போது சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் ஏன்? என்ற பல்வேறு கேள்விகளை மத்திய  தொல்லியல்துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தொல்லியல்துறை, பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பொறுப்பாளர்கள் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர். விரைவில் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் என்றனர்.

தொடர்ந்து, 12 பொருட்களை அமெரிக்காவிற்கு அனுப்பியது தொடர்பாக 1 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories: