நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா? தமிழ்நாடு உள்பட 18 மாநிலங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

புதுடெல்லி: நவம்பர் 7 முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமா? எனக் கேட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. காற்று மாசு குறித்த மனுவை கடந்த 2ம் தேதி விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, ‘டெல்லி, அதை சுற்றியுள்ள மாநில பொதுமக்கள், சுற்றுச்சூழல் நலனை கருத்தில் கொண்டு, வருகிற 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு விசாரணையை வருகிற 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, `டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பட்டாசு விற்பனை, வெடிக்க தடை விதித்துள்ளதால், நோட்டீஸ் அனுப்ப தேவையில்லை. அதே நேரம், காற்றின் தரம் குறைந்த மாநிலங்களில் வரும் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து காற்று மாசு நிலவும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, அசாம், பீகார், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Related Stories: