10,775 கோடி ஜிஎஸ்டி இழப்பு தொகை தர வேண்டிய நிலையில்தமிழகத்துக்கு 380 கோடி மட்டுமே மத்திய அரசு விடுவிப்பு: தமிழக அரசு அதிருப்தி

சென்னை: 10,775 கோடி ஜிஎஸ்டி இழப்பு தொகை தர வேண்டிய நிலையில்,  தமிழகத்துக்கு 380 கோடி மத்திய அரசு விடுவித்து இருப்பது தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையை அமல்படுத்தும் வகையில்  கடந்த 2017 ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. இந்த வரி 3 விதமாக, அதாவது எஸ்ஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி என்கிற அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. இதில், எஸ்ஜிஎஸ்டி வரி முழுவதும் மாநில வருவாயில் வந்து சேரும். அதே நேரத்தில் சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி வருவாய் மத்திய அரசு தொகுப்புக்கு சென்று விடுகிறது. மத்திய அரசு தொகுப்புக்கு செல்லும் வருவாய் பின்னர் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

இந்த ஜிஎஸ்டி நடைமுறையால் தமிழகத்துக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனவே, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் இழப்பு ஏற்பட்டால் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநிலங்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி 14 சதவீதத்தை விட குறைவாக இருந்தால் அதற்கான இழப்பீட்டை தரும் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், ஆரம்பத்தில் மத்திய அரசு சார்பில் இழப்பு தொகை தந்தது. ஆனால், அதன் பிறகு தரவில்லை. குறிப்பாக, தமிழகத்துக்கு 10,775 கோடி வருவாய் இழப்பு தர வேண்டியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பல முறை கடிதம் எழுதியும், வருவாய் இழப்பை தரவில்லை. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் நிதி பற்றாக்குறை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் ஜிஎஸ்டி இழப்பை விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கோரிக்கை வைத்தார். மேலும், இது தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது.

 இந்த நிலையில், ஜிஎஸ்டி மூலம் கடந்த மாதத்தில் 1 லட்சம் கோடி வருவாய் மத்திய அரசு ஈட்டியுள்ளது. இதில், தமிழகத்துக்கு தர வேண்டிய 10 ஆயிரம் கோடியில் பாதியாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6,400 கோடியை மத்திய அரசு மாநிலங்களுக்கு விடுவித்தது. இதில், தமிழகத்துக்கு வெறும் 380 கோடி மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது. இது, தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு வருவாய் இழப்பை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் கடிதம் எழுத திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: