பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து..!! தாமதமின்றி ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

சென்னை: பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், விடுதலை விவகாரத்தில் தாமதம் ஏன் எனக் கேட்டு, தனது கருத்தைத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இனியாவது ஆளுநர் தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள பேரறிவாளன் உள்பட எழுவர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவை முடிவெடுத்து, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது.

பின்னர், பல்வேறு சட்டச் சிக்கல்களைத் தாண்டி, இன்றைய அதிமுக ஆட்சி, அந்த எழுவரை விடுதலை செய்யவேண்டுமென்று முடிவெடுத்து, ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கோப்பு, அப்படியே கிடப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பது தாமதிக்கப்பட்ட நீதியாகும். பேரறிவாளனால் தனியே தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது கருத்தைத் தெளிவாகத் தெரிவித்து, ஏன் தேவையற்ற காலதாமதம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், மேலும் காலதாமதம் இன்றி அந்த எழுவர் விடுதலைக்கான கோப்பில் உடனே ஒப்புதல் அளித்து, மாநில அரசின் உரிமையையும், மனிதாபிமானத்தையும் மதிக்க வேண்டியது தமிழக ஆளுநரின் அவசரக் கடமையாகும். அதை மீண்டும் அழுத்தம் கொடுத்து, ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டியது அதைவிடத் தேவையான அவசரக் கடமையாகும். இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: