தேர்தல் பிரசாரத்தின் போது நிதிஷ்குமார் மீது வெங்காயம் வீச்சு

மதுபானி: பீகார் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் மீது சிலர் வெங்காயம் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் 3ம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தீவிரமாக இறங்கியுள்ளன. மதுபானி நகரில் உள்ள ஹர்லாக்கி எனும் பகுதியில் பேரணியிலும், தேர்தல் பொதுக்கூட்டத்திலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் நேற்று பங்கேற்றார்.

அப்போது தேர்தல் பிரச்சார மேடையில் முதல்வர் நிதிஷ் குமார் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்த சிலர் வெங்காயத்தை நிதிஷ் குமாரை நோக்கி சரமாரியாக வீசினர். ஆனால், மேடையில் விழுந்த வெங்காயம் நிதிஷ் குமார் மீது படவில்லை. உடனடியாக நிதிஷ் குமாரின் காப்பாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும், நிதானமாகவே இருந்த நிதிஷ் குமார் தனது பேச்சை நிறுத்தவில்லை. “வீசுங்கள், இன்னும் வெங்காயத்தை வீசுங்கள். நீங்கள் வீசினாலும் நான் பேச்சை நிறுத்தமாட்டேன்” எனக் கூறி தொடர்ந்து பிரசாரம் செய்தார். வெங்காயத்தை வீசிய நபர்களை கட்சி தொண்டர்களும், போலீசாரும் சுற்றி வளைத்து பிடித்தனர். அதைப் பார்த்த நிதிஷ் மிக நிதானமாக, ‘‘போகட்டும் விடுங்கள். அவர்கள் மீது கவனத்தை செலுத்தாதீர்கள்’’ என கூறி பிரசாரத்தை தொடர்ந்தார். பீகார் தேர்தல் பிரசாரத்தில் நிதிஷ் பேச்சை இடையூறு செய்ய இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன், கடந்த 26ம் தேதி முசாபர்பூர், சக்ரா பகுதியில் அவர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் ஏறி புறப்பட்ட போது சிலர் செருப்புகளை வீசினர்.

Related Stories: