நாமக்கல் அரசு மருத்துவமனையில் 10 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் கொள்கலன் பயன்பாட்டுக்கு வந்தது

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் கொள்கலன் பயன்பாட்டுக்கு வந்தது. நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் 140 படுக்கைகள், மகப்பேறு சிகிச்சை பிரிவில் 24 படுக்கைகள், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் 23 படுக்கைகள், பொது மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்குகளில் மொத்தம் 10 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மருத்துவமனையின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் குழாய் மூலம் கொண்டு செல்ல நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குறிப்பாக வயதானவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவு ஏற்படுவதால், அவர்களுக்கு ஆக்ஸிஜன் அதிகளவில் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைக்கு தினமும் 90 முதல் 100 சிலிண்டர்கள் வரை தேவைப்பட்டது. சிலிண்டர்களை மருத்துவமனைக்குள் கொண்டு செல்வதும், காலியான சிலிண்டர்களை வெளியே கொண்டு வருவதும் பெரும் சவாலாக இருந்தது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தற்போது 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் கொள்கலன் மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. வாரம் ஒரு முறை லாரி மூலம் நேரடியாக கொள்கலனுக்கு ஆக்சிஜன் எளிதில் வினியோகிக்க முடியும்.

நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் எளிதில் வழங்க உதவியாக நிறுவப்பட்ட மிகப்பெரிய ஆக்கிஜன் கொள்கலன், நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குநர் சித்ரா ஆகியோர் பார்வையிட்டு, அதன் பயன்பாடுகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு விளக்கி கூறினர்.

Related Stories: