திருவேற்காடு நகராட்சி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக விரைவில் அறிவிப்பு: ஆணையர் தகவல்

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவேற்காடு நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிடம் இல்லாத வீடுகளை கணக்கெடுப்பு செய்து தனிநபர் கழிப்பிடம் கட்டப்பட்டு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொதுக்கழிப்பிடம் ஒன்றும், 10 சமுதாயக் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளின் நிர்வாகத்திடமும், மாணவ மாணவிகளிடமும் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கழிவறைகள் மற்றும் வீடுகளில் உள்ள கழிவறைகளை மட்டும் பயன்படுத்துகின்றனர்.

திறந்தவெளி கழிப்பிடமாக எந்தப்பகுதியும் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், நகர்நல சங்க நிர்வாகிகள், பொதுமக்களின் பிரதிநிதிகளிடமிருந்தும் உறுதிமொழி கடிதங்கள் பெறப்பட்டுள்ளன. திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் திறந்தவெளி கழிப்பிடமில்லாத பகுதிகளாகவும், 100 சதவீதம் கழிப்பிடம் பயன்பாடு உள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. தூய்மை நகர பட்டியலில் திருவேற்காடு நகராட்சி தமிழக அளவில் 39ம் இடத்தினையும், தென்னிந்தியா அளிவில் 131வது இடத்தினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளையும், ஆட்சேபனைகளையும் நகராட்சியில் தெரிவிக்கலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: