நடிகை பலாத்கார வழக்கு தனி நீதிமன்ற விசாரணைக்கு வரும் 6ம் தேதி வரை தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள நடிகை பலாத்கார வழக்கில் தனிநீதிமன்ற விசாரணையை வரும் 6ம் தேதிவரை நிறுத்தி வைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விசாரணையின் போது, நீதிமன்றத்திற்கு வந்த ஒரு மொட்டை கடிதத்தை நீதிபதி வாசித்துள்ளார். இதையடுத்து அரசு தரப்பு வக்கீல், விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார்.

பாதிக்கப்பட்ட நடிகையும் நீதிமன்றத்தை மாற்றக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை தரப்பு வக்கீல் கூறுகையில், ‘‘நடிகை பலாத்கார வழக்கு விசாரணை மூடப்பட்ட நீதிமன்றத்தில் நடக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வக்கீல்கள் இருக்க வேண்டும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 20க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அமர்ந்து இருக்கின்றனர்.

அவர்கள் பாதிக்கப்பட்ட நடிகையை சுற்றிவளைத்து, அச்சுறுத்தும் வகையில், மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் எண்ணத்தில் ஆபாசமான கேள்விகளை கேட்கின்றனர்.

இதுகுறித்து நீதிபதியும் கண்டு கொள்வதில்லை. இந்த நீதிமன்றத்தில் இருந்து பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்காது’’ என்றார். இதுபோல அரசு தரப்பு வக்கீல் கூறுகையில், இந்த வழக்கில் நடிகர் திலீப், ‘பாதிக்கப்பட்ட நடிகையை உயிருடன் கொளுத்துவேன்’ என நடிகை பாமாவிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நடிகை நீதிமன்றத்தல் கூறியும் கண்டு கொள்ளவில்லை. எனவே விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், தனிநீதிமன்ற விசாரணையை வரும் 6ம் தேதிவரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது.

Related Stories: