வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டதை எதிர்த்து சரிதா நாயர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.!!!

டெல்லி: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டதை எதிர்த்து சரிதா நாயர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி உச்சநீதிமன்றம் செய்தது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், வயநாடு தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றிபெற்றார்.

அந்தத் தேர்தலில் அவர் போட்டியிட்ட அதே தொகுதியில் சோலார் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். வயநாடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தநிலையில், சோலார் ஊழல் விவகாரத்தில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருடைய வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.

அதன்பின்னர், இந்தத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கு எதிராக, அவர் கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கைக் கேரளா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. பின்னர் இந்தத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் சரிதா நாயர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்ரமணியன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், சரிதா நாயருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தனர்.

Related Stories: