விபத்து, நெரிசலை தவிர்க்க நடவடிக்கை சிக்னல்களில் ஸ்டாப் லைனை தாண்டி வாகனங்களை நிறுத்தினால் அபராதம்: போலீசார் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சிக்னல்களில் ஸ்டாப் லைனை தாண்டியும், சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது நிற்காமல் செல்வதையும் பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதனால் அதிக விபத்து ஏற்படுகிறது. வழக்கமாக, சிக்னல் ஸ்டாப் லைனை தாண்டி நிற்பவர்களை போலீசார் எச்சரித்து பின்னால் போக சொல்வார்கள். ஸ்டாப்லைனை தாண்டி வாகனங்களை நிறுத்துவதால் நடந்து செல்பவர்களுக்கு இடையூறாக ஏற்படுகிறது. மேலும் எதிர் திசையில் வரும் வாகனங்கள் செல்வதற்கு வழியில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் போக்குவரத்து போலீசார் சார்பில் நேற்று முதல் 3 நாட்களுக்கு சிக்னல் ஸ்டாப் லைனை தாண்டி வாகனங்களை நிறுத்த கூடாது என வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன்படி சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை, ஆற்காடு சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, வேப்பேரி கமிஷனர் அலுவலம் அருகே உள்ள சிக்னல்கள் என 408 சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் நேற்று காலை 10 மணி முதல் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  

மேலும், கமிஷனர் அலுவலகம் முன்பாக உள்ள சிக்னல்களில் வேப்பேரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேல் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் ஸ்டாப் லைனை தாண்டி வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறியதுடன், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தினார். இனி வரும் காலங்களில் சிக்னல் ஸ்டாப் லைனை தாண்டி நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும், என போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

Related Stories: