வேகமாக செல்லும் வாகனங்களால் சென்னையில் சைக்கிள் ஓட்டுவது சிரமம்: ஸ்மார்ட் சிட்டி நிறுவன ஆய்வில் தகவல்

சென்னை: சென்னை சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களால் சைக்கிள் ஓட்டுவது சிரமமாக உள்ளது என்று சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து முடங்கி உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் குறைந்த அளவிலான பொது போக்குவரத்து மட்டுமே இயக்கப்படுகிறது. இந்நிலையில் இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து திட்டத்தை ஊக்குவிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. குறிப்பாக சைக்கிள் மற்றும் நடைபாதை பயன்படுத்துவதை ஊக்குவிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, சைக்கிள் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்க ‘இந்தியா சைக்கிள் பார் சேஞ்ச் சேலஞ்ச்’  என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதில் 100 ஸ்மார்ட் சிட்டி நிறுவனங்கள் சார்பில் சமர்ப்பிக்கப்படும் திட்டங்களை ஆய்வு செய்து சிறந்த 8 திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும். இதன்படி சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் சமர்ப்பிக்கவுள்ள திட்டம் தொடர்பாக சென்னையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் சென்னையில் சைக்கிள் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1986 பேர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதில் 81 சதவீதத்தினர் ஆண்கள், 19 சதவீதத்தினர் பெண்கள். இவர்களில் 14 வயதுக்குட்பட்டவர்கள் 1 சதவீதத்தினர், 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 4 சதவீதத்தினர். 19 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் 83 சதவீதத்தினர். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11 சதவீதத்தினர். 36 சதவீதம் பெண்களும், 59 சதவீதம் ஆண்களும் வாரத்தில் ஒரு சில நாட்கள் சைக்கிள் பயன்படுத்துகின்றனர்.

சென்னையில் சைக்கிள் ஓட்டுவதற்கு எது பிரச்னையாக உள்ளது என்ற கேள்விக்கு வாகனங்கள் வேகமாக செல்வது என்று 83 சதவீத பெண்கள், 77 சதவீத ஆண்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக நடைபாதையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் என்று 44 சதவீத பெண்களும், 49 சதவீத ஆண்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதை அடிப்படையாக கொண்டு மூன்று வழித்தடங்களில் சைக்கிள் பாதை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் மெரினா கடற்கரையில் அதிகாலை சைக்கிளிங் செல்பவர்களின் வசதிக்காக போக்குவரத்து காவல் துறை சார்பில் தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: