மண்ணில் புதைக்கப்பட்டுள்ள கரன்ட் கம்பியில் இருந்து ஷாக்: பசுமாடு பலியானதால் மக்கள் உயிர்தப்பினர்

ஆவடி: ஆவடி  மாநகராட்சி 16வது வார்டுக்கு உட்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்பு  பூங்கா தெருவில் மழைநீர் கால்வாய் மற்றும் சாலை சீரமைக்கும் பணிகள்  நடைபெற்றது.  இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பூமியில் பள்ளம் தோண்டியதால் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த மின்சார கம்பிகள் அனைத்தும் சேதம் அடைந்து வெளியே  நீட்டிக்கொண்டிருந்தது. இதை அப்பகுதி மக்களும் நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.இந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மின்சார வயர் செல்லும்   பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. அந்த சமயத்தில் அவ்வழியாக சென்ற பசுமாடு ஒன்று பள்ளத்தில் கால் வைத்ததால் ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது.

மற்றொரு பசுமாடு ஷாக் அடித்து உயிருக்கு போராடியது. உடனடியாக அப்பகுதியை சேர்ந்த சிலர், சென்று அந்த மாட்டை மீட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். பொதுமக்கள்  கொடுத்த தகவல்படி, மின்வாரிய அதிகாரிகள் வந்து கம்பியை சீரமைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘’மாநகராட்சி சார்பில் கால்வாய், சாலை பணிகளுக்காக பள்ளம் தோண்டும்போது பூமியில் உள்ள மின்வயர்கள் சேதம் அடைந்து விடுகிறது. பணிகளை முடித்து செல்லும் ஒப்பந்ததாரர்கள், இதுபற்றி  மாநகராட்சி அதிகாரிகளுக்கு  முறையாக தெரிவிப்பது கிடையாது. இதனால் இதுபோன்ற உயிரிழப்பு நடக்கிறது. மாடு இறந்ததால் உஷாராகிவிட்டோம். இல்லாவிட்டால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு  இருக்கும். இனிமேல் மாநகராட்சி விழிப்புடன் இருக்கவேண்டும்’ என்றனர்.

Related Stories: