வேலூர் கோட்டையில் வாடகை கட்டிடம்: இட நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அரசு அருங்காட்சியகம்: சொந்த கட்டிடம் கட்ட கோரிக்கை

வேலூர்: வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் வாடகை கட்டிடத்தில் இட நெருக்கடியில் இயங்கி வருகிறது. எனவே சொந்த கட்டிடம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் கோட்டையில் அரசு அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. இங்கு வரலாற்று சின்னங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய அரிய பொருட்கள், மண்பாண்டங்கள், ஆயுதங்கள், சுவாமி சிலைகள் உள்ளிட்டவைகளும், அரிய புகைப்படங்கள், நூற்றாண்டு கல்வெட்டுகள் உட்பட ஏராளமான கற்சிலைகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதோடு பூமியில் புதைந்திருந்து கண்டெடுக்கப்பட்ட ஏராளமான சிலைகளும் மீட்கப்பட்டு இந்த அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு காலகட்ட மன்னர்கள் பயன்படுத்திய அரியவகை பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப்பயணிகள், உள்ளூர் மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று அதிகளவில் அருங்காட்சியகத்திற்கு வந்து பார்த்துச்செல்கின்றனர்.

வரலாற்று நினைவுகளோடு, பழமை மாறாத நிலையில் வேலூர் கோட்டையில் அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. ஆனால், போதிய இடவசதியில்லாததால் அருங்காட்சியத்தில் உள்ள கற்சிலைகள் அருங்காட்சியக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியக கட்டிடம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு வாடகையாக அருங்காட்சியகம் சார்பில் மாதம் ₹5ஆயிரம் வாடகை செலுத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக மாத வாடகை செலுத்திய தொகைக்கு புதிய கட்டிடத்தையே கட்டியிருக்கலாம். வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற திருவண்ணாமலையில் பல லட்சம் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.

ஆனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகம் வாடகை கட்டிடத்தில் இட நெருக்கடியில் இயங்கி வருகிறது. எனவே தற்போதுள்ள அருங்காட்சியக கட்டிடத்துக்கு எதிரே திருவள்ளுவர் பல்கலைக்கழக அலுவலகம் இயங்கி வந்து தற்போது காலியாக கிடக்கும் கட்டிடத்தையும் ஒதுக்கித்தர வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.ஆனால் இதுவரையிலும் அதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை. எனவே வேலூர் அருங்காட்சியகத்துக்கு என்று சொந்தமாக   புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: