துருக்கியில் மீட்புப்பணிகள் தீவிரம் பூகம்ப பலி 27 ஆக உயர்வு: வெட்டவெளியில் மக்கள் தவிப்பு

இஸ்மிர்: துருக்கி பூகம்பத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 800க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். துருக்கியின் 3வது மிகப்பெரிய நகரமான இஸ்மிரில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் துருக்கியின் ஏகன் கடற்கரையில் இருந்து கிரிஸ் நாட்டின் சாமோஸ் தீவு வரை உணரப்பட்டது. இந்த பூகம்பத்தால் துருக்கி கடற்கரையிலும், சாமோஸ் தீவிலும் சிறிய அளவில் சுனாமியும் ஏற்பட்டது. கடல் நீர் நகரங்களின் தெருக்களில் புகுந்தது. இதில், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.  

இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவானது. இதனால், துருக்கியின் இஸ்மிர் நகரத்தில் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இவற்றில், 8 கட்டிடங்கள் பல அடுக்குகள் கொண்ட குடியிருப்புகளாகும். இடிந்த கட்டிடங்களில் சிக்கி, இதுவரையில் 27 பேர் பலியாகி உள்ளனர். இதுவரையில் 800 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், மீட்புப்படையின் தொடர் முயற்சியால் நேற்று காலை 8 மாடி கட்டிட இடிபாடுகளில் இருந்து இளைஞர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். இதேபோல், மற்றோர் இடத்திலிருந்து 2 பெண்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் கூடுதலாக 3 ஆயிரம் மீட்புப்படை அதிகாரிகள் இஸ்மிருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.  சேதமடைந்த கட்டிடங்களுக்கு பொதுமக்கள் மீண்டும் திரும்ப வேண்டாம் என்று துருக்கி அரசு எச்சரித்துள்ளது. இதனால், மக்கள் வெட்டவெளியில் கடும் குளிரில் இரவெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தனர். கிரிஸ் நாட்டின் சாமோஸ் தீவிலும் இந்த பூகம்பத்தால் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. பூகம்ப பாதிப்பு தொடர்பாக, இருநாட்டு பகையை மறந்து துருக்கி அதிபரிடம் கிரீஸ் பிரதமர் தொலைபேசியில் பேசி, வேண்டிய உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

தொடரும் பதற்றம்

* கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள தங்கள் குடும்பத்தினர் மீட்கப்படுவார்களா என்று நூற்றுக்கணக்கானோர் பதைபதைப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

* பூகம்பத்தை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

Related Stories: