வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை பணிகளில் கோட்டை: தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலை, தெருக்களில் தேங்கிய அவலம்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பணிகளில் பொதுப்பணித்துறை கோட்டை விட்டதால் கால்வாய்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலை, தெருக்களில் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி, டிசம்பர் 31ம் தேதி வரை மழை பொழிவு இருப்பது வழக்கம். இந்த பருவமழையையொட்டி அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலையாற்று படுகைகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் செல்ல வசதியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை செப்டம்பர் முதல்வாரத்தில் தொடங்கியிருக்க வேண்டும். இதற்காக ஆகஸ்ட் மாதம் ரூ.9.90 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

அதன்படி, சென்னை மண்டலத்தில் கீழ்பாலாறு கோட்டத்தில் 3 பணிக்கு ரூ.2.50 கோடி, கொசஸ்தலையாறு கோட்டத்தில் 2 பணிக்கு ரூ.2 கோடி, ஆரணியாறு கோட்ட வடிலத்தில் 3 பணிக்கு ரூ.2 கோடி, கிருஷ்ணா நீர் விநியோக திட்டகோட்டத்தில் 1 பணிக்கு ரூ.40 லட்சம், வெள்ளாறு கோட்டத்தில் 2 பணிக்கு ரூ.1 கோடி, சிதம்பரம் கொள்ளிடம் கோட்டத்தில் 3பணிக்கு ரூ.2 கோடி என மொத்தம் 14 பணிக்கு ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் பருவமழை தூர்வாரும் பணிக்கு குறுகிய கால டெண்டர் விட்டு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்தது. இந்த பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்த நிறுவனங்களிடம் மிதவை இயந்திரம், ஜேசிபி வைத்திருக்க வேண்டும்.

ஆனால், தற்போது டெண்டர் எடுத்த ஒரு சில ஒப்பந்த நிறுவனங்களிடம் மிதவை இயந்திரம் இல்லை. இதனால், கால்வாய்களில் ஆகாயத்தாமரை மற்றும் செடி, கொடிகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஒரு சில இடங்களில் கால்வாய்களில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை மற்றும் செடி, கொடிகள் அகற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது வரை 60 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், தற்போது வரை கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், அந்த பகுதிகளில் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டது. இதனால், கால்வாய்களில் இருந்து வெளியேறிய மழை நீர் சாலைகளில், தேங்கி குட்டை போல் காட்சியளித்தது.

இந்த நிலையில் சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா ஆகியோர் மழை முன்னெச்சரிக்கை பணிகளை வேகப்படுத்த ஒப்பந்த நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் தகுதியான ஒப்பந்த நிறுவனங்களை தேர்வு செய்யாததன் விளைவாக மிதவை இயந்திரம் இல்லாமல் தண்ணீரை வெளியேற்றுவது கடினம். இதனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது, முன்னெச்சரிக்கை பணிகளை முடிக்காமல் இருக்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக பொதுப்பணித்துறை ஆலோசித்து வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: