கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 இடங்களில் குவாரிகள் ஏலம் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிம வளங்களை எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தின் பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் கருப்பு கிரானைட் எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பை மாவட்ட கலெக்டர் கடந்த ஜூன் 3ல் வெளியிட்டார்.

விதிகள் எதையும் பின்பற்றாமல் தமிழக அரசு ஏலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே, இந்த ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, இடைக்கால தடை விதித்தது. பின்னர், இந்த உத்தரவில் மாற்றம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு தமிழக அரசு டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். டெண்டரில் வெற்றிபெற்ற ஒப்பந்ததாரருக்கு சாதகமாக டெண்டரை செயல்படுத்த கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி தாலுகாக்களில் 18 இடங்களில் கருப்பு, சிவப்பு, சாம்பல் நிற கிரானைட்டுகளை எடுக்க ஒப்பந்ததாரர்களை அழைக்கும் அறிவிப்பை கிருஷ்ணகிரி கலெக்டர் அக்டோபர் 9ம் தேதி வெளியிட்டார். இதையடுத்து, ஏற்கனவே, தர்மபுரி மாவட்டத்தில் விடப்பட்ட டெண்டரைப்போலவே இந்த டெண்டரும் விதிகளுக்கு புறம்பானது என்றும் டெண்டரை அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரியும் தர்மபுரி தொகுதி திமுக முன்னாள் எம்பி தாமரைச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி தாலுகாக்களில் அதிக மதிப்புள்ள கிரானைட்டுகள் உள்ளன. இந்த கிரானைட்களை எடுப்பதற்கான ஏலத்தில் பங்குகொள்ளும் ஒப்பந்ததாரர்கள் அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 2ம் தேதி ஏலம் விடப்படும் என்று கிருஷ்ணகிரி கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கிரானைட் குவாரிகளுக்கு எப்படி அனுமதி வழங்க வேண்டும். அதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து மத்திய கனிம வளத்துறை வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது. அதன்படி சுற்றுச்சூழல் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

ஏற்கனவே தமிழகத்தில் சுமார் 1000 ஹெக்டேர் பரப்பில் சுற்றுச்சூழல் தடையில்லா சான்று இல்லாமல் சட்டவிரோத குவாரிகள் இயங்கி வருகின்றன. இதே போல் தற்போது கிருஷ்ணகிரியிலும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் குவாரிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் உறுதிபடுத்தியுள்ளது. ஆனால், இது குறித்து டெண்டர் அறிவிப்பில் எதுவும் கூறப்படவில்லை. கலெக்டர் அலுவலக நோட்டீஸ் போர்டிலும் தெரிவிக்கப்படவில்லை. எந்தெந்த நிலங்கள், அதன் எல்லை என்ன, அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிலை என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக மத்திய கனிமவள துறையின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக இந்த டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். டெண்டரை அறிவிப்பை  ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: