ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.598 கோடி மானியம் நிலுவை: தமிழ்நாடு கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்கள் சங்கம் தகவல்

சென்னை:தமிழ்நாடு கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி கூறியதாவது:

* 2002ம் ஆண்டுக்கு முன்பாக பணிக்குச் சேர்ந்து 1.4.2021க்கு பின்னர் ஓய்வுபெறும் தொடக்க நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகளின் பணியாளர்களுக்கும் அந்தந்த கூட்டுறவு சங்க பொதுநிதியிருந்து எல்ஐசி ஓய்வூதியத் திட்டத்தில் சேர்த்து நிர்வாக ரீதியான பென்சன் வழங்கும் திட்டத்திற்கு மாநில பதிவாளர் அனுமதிக்க வேண்டும். ஓய்வூதியம் வழங்கும் வரை அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதினை பண்டகசாலையின் பணியாளர்களுக்கு பொருத்தாமல் நிறுத்தி வைத்து விருப்ப ஓய்வுபெறும் முறையினை மட்டும் நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம்.

* 150க்கும் மேற்பட்ட கூட்டுறவு பண்டகசாலைகளில் ஒரு அலுவலகப் பணியாளர்கள் கூட இல்லாமல் இயங்கி வருகிறது. எனவே, ஒவ்வொரு தொடக்க நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகளுக்கும் அலுவலக பதவிக்கு சம்பளம் பெறும் ஓரு அலுவலகப் பணியாளர் கட்டாயமாக பணிக்க வேண்டுகிறோம்.

* 2018-2019 ஆண்டிற்கு நியாயவிலைக் கடை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய ரூ.398 கோடி மானியமும், 2019-2020க்கு வழங்க வேண்டிய ரூ.200 கோடி மானியமும் சேர்த்து ரூ.598 கோடியினை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டுகிறோம். இது தொடர்பாக கூட்டுறவு அமைச்சரை செல்லூர் ராஜூவை சந்தித்து மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: