குறைந்த வாடகைக்கு கிடைக்கும் கோயில் மண்டபங்களில் சுபநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை: ஏழை எளியோர் திருமணம் நடத்த முடியாமல் தவிப்பு; அறநிலையத்துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் மண்டபங்களில் திருமணத்துக்கு அனுமதி இல்லாததால் ஏழை, எளியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,120 கோயில்கள் உள்ளன. இதில், திருத்தணி முருகன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் அடங்கும். இக்கோயில்களுக்கு சொந்தமாக திருமண மண்டபங்கள் உள்ளன. இதில் கிடைக்கும் வாடகை வருவாய் மூலம் கோயில்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, கோயில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், மண்டபங்களில சுபநிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டன. மேலும், கோயில்களில் தினமும் ஒரே ஒரு திருமணம் நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அவ்வாறு திருமணம் நடத்தும் பட்சத்தில் கோயில்களில், சமூக இடைவெளி விட்டு கலந்து கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கோயில் மண்டபங்களில் திருமணம் நடத்தி கொள்வதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது தனியார் திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து கோயில் மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கலாமா என்பது தொடர்பாக கோயில் அலுவலர்கள் கமிஷனர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

ஆனால், கமிஷனர் அலுவலகம் சார்பில் கோயில் மண்டபங்களில் திருமணம் உட்பட எந்தவொரு சுபநிகழ்ச்சிகளுக்கும் அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் மண்டபங்களில் திருமணம் நடத்திக் கொள்வதற்கு அனுமதி மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அறநிலையத்துறைக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயில் மண்டபங்கள், சமூக நலக்கூடங்களில் தான் ஏழை எளியோர் பயன்படுத்தி கொள்ளும் வகையில் குறைந்த வாடகையில் கிடைக்கிறது.

ஆனால், தனியார் மண்டபங்கள் சுபநிகழ்ச்சிகளுக்கு லட்சக்கணக்கில் வாடகை கட்ட வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழலில் கோயில் மண்டபங்களில் அனுமதி மறுக்கப்படுவதால், ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே, தேதி முடிவு செய்து விட்டதால், அவர்கள் வேறுவழியின்றி தங்களது வீட்டு சுபநிகழ்ச்சிகளை அதிக பணம் கொடுத்து தனியார் மண்டபங்களில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் சிலர் வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: