சேமிக்கும் பழக்கம் மிகவும் அவசியம்: முதல்வர், துணை முதல்வர் உலக சிக்கன நாள் வாழ்த்து

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:  மக்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் நாள் உலக சிக்கன நாளாக  கொண்டாடப்படுகிறது. ‘சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும்’ என்ற முதுமொழிக்கேற்ப ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமிக்க  வேண்டியது மிகவும் அவசியமாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இந்த உலக சிக்கன நாளில், தமிழ்நாட்டு மக்கள்  அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற, அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: உலக சிக்கன நாள் விழா கொண்டாடுவதை அறிந்து என் மனமார்ந்த மகழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் 1985ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர்  30ம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து சிக்கன நடவடிக்கையைக் கடைபிடித்து, சிக்கனமாக வாழ்ந்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள்  வலியுறுத்துகிறது. எனவே தமிழக மக்கள் அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் பாதுகாப்பான அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் இன்றே முதலீடு செய்து பயன் பல பெற்றிட  இந்த உலக சிக்கன நாளில் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு  கூறியுள்ளார்.

Related Stories: