தங்கம் விலையில் மாற்றம் சவரனுக்கு 216 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 216 குறைந்தது. பண்டிகை நேரத்தில் தங்கத்தின் விலை நிலையாக இல்லாதது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் தங்கம் விலை  கிடுகிடுவென அதிகரித்து வந்தது.  ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் தங்கம் 43,328க்கு விற்று வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. அதன் பிறகு கடந்த 2 மாதங்களாக தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. கடந்த 27ம்  தேதி ஒரு சவரன் ₹38,048க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் கிராமுக்கு 12 அதிகரித்து ஒரு கிராம் 4,768க்கும், சவரனுக்கு 96 அதிகரித்து ஒரு சவரன் 38,144க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலையில் தங்கம் விலையில்  அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ₹30 குறைந்து ஒரு கிராம் 4,738க்கும், சவரனுக்கு 240 குறைந்து ஒரு சவரன் 37,904க்கும் விற்கப்பட்டது.

மாலையில் தங்கம் விலையில் ேமலும் மாற்றம் காணப்பட்டது. காலையில் விற்பனையான விலையை விட மாலையில் தங்கம் விலை சற்று அதிகரித்தது. இருந்த போதிலும் நேற்று முன்தினம் விலையை விட தங்கம் விலை குறைந்து  காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு 27 குறைந்து ஒரு கிராம் 4,721க்கும், சவரனுக்கு 216 குறைந்து ஒரு சவரன் 37,928க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை சவரனுக்கு 216 குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  அதே நேரத்தில் வரும் நாட்களில் தீபாவளி உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் நகை விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இவ்வாறு இருக்கும் போது நகை விலை நிலையாக இல்லாமல்  தினமும் ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுவது நகை வாங்குவோரிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: