ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

ஹைதராபாத் : ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் தற்போது ஆன்லைன் பந்தயங்கள், சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகள் பிரபலமாகி வருகின்றனர். தொடக்கத்தில் நேரத்தை கழிப்பதற்காக இது போன்ற விளையாட்டில் பங்கேற்பவர்கள், பின்னர் பணம் கட்டி விளையாடத் துவங்குகின்றனர். சில நூறு ரூபாய்களில் ஆரம்பித்து, சில லட்ச ரூபாய்கள் வரை பணம் கட்டி விளையாடி வருகின்றனர். இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் சிலர் தங்களது சேமிப்பு பணத்தை எல்லாம் பந்தயமாக கட்டி விளையாடுகின்றனர். ஆனால் விளையாடும் அனைவருக்கும் அவர்களது பணம் திரும்ப கிடைத்துவிடுவதில்லை. இது போன்ற ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து சிலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் நடிக்கக் கூடாது என்றும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு ஜெகன் மோகன் ரெட்டி எழுதியுள்ள கடிதத்தில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் சமூகத்திற்கு ஆபத்தானவை.ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் அடிமையாகி பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இளைஞர்களின் மனநலமும் பாதிக்கப்படுகிறது. எனவே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு என்ற மிகக்கொடிய சமூக கொடுமையை கூடிய விரைவில் ஒழிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக குறுக்கிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும், ஆப்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும், எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் தடை செய்யப்பட வேண்டிய 132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இணையதளங்கள் மற்றும் ஆப்களின் பட்டியலையும் ஜெகன் மோகன் தனது கடிதத்தில் இணைத்துள்ளார்

Related Stories: