அறநிலையத்துறையில் பணியாற்றி வந்த ஓய்வு பெற்ற 5 ஆயிரம் பேர் டிஸ்மிஸ்: கமிஷனர் அதிரடி உத்தரவு

சென்னை: அறநிலையத்துறையில் பணியாற்றி வந்த ஓய்வு பெற்ற 5 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்க கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், எழுத்தர், கண்காணிப்பாளர், ஆய்வர், மேலாளர் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளது. தற்போது பல்வேறு நிலைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், அறநிலையத்துறையில் உள்ள முக்கிய கோயில்களில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால், தற்காலி ஊழியர்களாக ஓய்வு பெற்ற ஊழியர்களை நியமனம் செய்ய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்பேரில், அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் உட்பட மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அறநிலையத்துறை ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே, அறநிலையத்துறை சார்பில் ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில், அவர்களை பணியமர்த்தியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் பொதுத்துறை நிறுவனங்களில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை பணியமர்த்தும் போது, தமிழக அரசின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். எவ்வித முன் அனுமதியும் இன்றி பணியில் அமர்த்தக் கூடாது என்று நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அனைத்து துறை நிர்வாக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் ஓய்வு பெற்ற அறநிலையத்துறை ஊழியர்களை வரும் 1ம் தேதிக்குள் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு கோயில்களிலும் ஓய்வு பெற்ற ஊழியர்களை விடுவித்தவுடன், அது தொடர்பான விவரங்களை அறிக்கையாக அனுப்ப அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பான பட்டியலையும் விரைந்து அனுப்ப கமிஷனர் பிரபாகர் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் கோயில்களில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த விவகாரம் அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: