மாஸ்க் அணிவது, தனி மனித இடைவெளி இன்னும் 3 மாதங்களுக்கு கடுமையாக்கப்படும்: சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை: கோவளம் மழைநீர் வடிகால் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்தார். கோவளம் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் மழைநீர் வடிகால் துறையின் தலைமை பொறியாளர் நந்தக்குமார் ஆகியோர் நேற்று ரிப்பன் மாளிகையில் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:  சென்னை மாநகராட்சியில் கடந்த 2016ம் ஆண்டு ₹4,034 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் முதற்கட்டமாக கூவம் மற்றும் அடையாறு வடிநிலப்பகுதிகளில் 406 கி.மீ தூரத்திற்கு ₹1,387.27 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக  கோவளம் பகுதியில் 360 கி.மீ தூரத்திற்கு ₹1,243.15 கோடி செலவில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவங்க உள்ளது. இதனை மூன்று கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்கட்ட பணிகள் ₹270.83 கோடி செலவில் 52 கி.மீ தொலைவுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. கோவளம் வடிகால் திட்டத்தின் மொத்த பரப்பளவு 1138 ஹெக்டர். இதில், 980.7 ஹெக்டர் பரப்பளவில் (86.21%) தற்போது வீடுகள் உள்ளன. 149 ஹெக்டரில் (13.10%) சாலைகள் உள்ளன.

மீதம் உள்ள 7.8% ஹெக்டர் பரப்பளவில் கல்வாய் அமைய உள்ளது. மொத்த பரப்பளவில் ஒரு சதவீதத்தில் மட்டுமே இந்த கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கோவளம் வடிகால் திட்டம் அமைக்கப்படும் பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 68 மி.மீ மழை பெய்யும் என்று கணக்கிட்டால், இதன் மூலம் 773.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதில் 303.74 மில்லியன் லிட்டர் தண்ணீர் பூமிக்குள் உரியும் என்றும், மீதம் உள்ள 469.7 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணாக செல்லும். ஆனால் தற்போது அமைக்கப்படும் வடிகால் திட்டத்தின் மூலம் 326.19 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.

இதன் மூலம் 90 சதவீதம் மழைநீரை நம்மால் சேமிக்க முடியும். சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுடன், டெங்கு தடுப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  பொதுமக்கள் பண்டிகை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். இன்னும் 3 மாதங்களுக்கு மாஸ்க் அணிவது மற்றும் தனி மனித இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட விதிகள் கடுமையாக்கப்படும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: