கொரோனா ஊரடங்கு முடிய 3 நாட்களே உள்ள நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி இன்று ஆலோசனை

தியேட்டர்கள் திறப்பது உள்பட பல தளர்வுகள் அறிவிக்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையை தொடர்ந்து தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் திறப்பது உள்ளிட்ட மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் மார்ச் 25ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 218 நாட்கள் அதாவது சுமார் 7 மாதங்களாக கொரோனா ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகள் மற்றும் மால் திறப்பது, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி, ரயில், பேருந்து, ஆட்டோ, கார் ஓட அனுமதி, கோயில்களை திறந்து வழிபாடுகளுக்கு அனுமதி என பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பள்ளிகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மெரினா கடற்கரை, மின்சார ரயில்கள், நீச்சல்குளம் உள்ளிட்ட சிலவற்றுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து வருகிறது. மேலும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் வருகிறது. இந்த நிலையில் தற்போது அறிவித்துள்ள ஊரடங்கு வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இதையடுத்து நவம்பர் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி விவாதிக்க இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து இன்று பிற்பகல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி, பொழுது போக்கு பூங்கா திறக்க அனுமதி உள்ளிட்ட முக்கிய தளர்வுகளை அறிவிக்க முதல்வர் எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.

மேலும், முக்கியமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த 5 மாதமாக திறக்கப்படாமல் உள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடைபெற்று வருகிறது. ஆனால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு எந்தவித பாடமும் நடத்தப்படாமல் உள்ளது. இறுதி தேர்வுக்கு இன்னும் 4, 5 மாதங்கள் மட்டுமே உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் நிலை கேள்விக்குறியாக உள்ளது. அதனால் சுழற்சி முறையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்பட உள்ளது. தமிழக அரசு அறிவிக்கப்பட உள்ள புதிய தளர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வருகிற 30 அல்லது 31ம் தேதி முதல்வர் எடப்பாடி அறிவிப்பார்.

Related Stories: