தமிழகத்தில் 10 கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் இல்லாததால் 2,000 மாணவர்கள் தவிப்பு!!

சென்னை : தமிழகத்தில் 10 புதிய கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் இல்லாததால் 2,000 மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் 10 புதிதாக தொடங்கப்பட்ட புதிய கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரே ஒரு பேராசிரியர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். 2 மகளிர் கல்லூரிகள் உட்பட புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பரில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலைக் கழகங்கள் திட்டமிட்டு இருந்தன.

அதற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் உள் மதிப்பீட்டு மதிப்பெண்களை அனுப்பி வைக்கும்படி கல்லூரிகளை பல்கலைக் கழகங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் வகுப்புகளே நடைபெறாத நிலையில், மாணவர்களுக்கு உள் மதிப்பீடு மதிப்பெண்களை எப்படி அனுப்ப முடியும் என்று கல்லூரிகள் திணறி வருகின்றனர்.இதே போன்று, செமஸ்டர் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத நிலையில், மாணவர்களும் தவித்து வருகின்றனர். எனவே அருகில் உள்ள கல்லூரிகளில் இருந்து புதிய கல்லூரிகளுக்கு பேராசிரியர்களை இடம் மாற்றம் செய்து வகுப்புகளை நடத்த வேண்டும் என்று கல்லூரி பேராசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். புதிய கல்லூரிகளுக்கு பேராசிரியர்களை இடம் மாற்றம் செய்ய உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.  

Related Stories: