மக்கள் தயக்கத்தை போக்கும் வகையில் தியேட்டருக்கு நடிகர், நடிகைகள் படம் பார்க்க வர வேண்டும்: சங்க செயலாளர் வேண்டுகோள்

சென்னை: தியேட்டர்கள் திறக்கப்படும்போது தியேட்டருக்கு மக்கள் வருவதற்கு தயக்கம் காட்டலாம். அதனை போக்குவதற்கு நடிகர், நடிகைகள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்று தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: தியேட்டர்கள் திறப்பது தொடர்பாக மத்திய அரசு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. மாநில முதல்வரிடம் விரைவில் தியேட்டரை திறக்க கோரிக்கை வைத்திருக்கிறோம். வருகிற 28ந் தேதி மருத்துவ குழுவுடன் கலந்து ஆலோசித்து சொல்வதாக முதல்வர் கூறியிருக்கிறார். நல்ல முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். மத்திய, மாநில அரசின் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்போம். ரசிகர்களால் நாங்கள் வாழ்கிறோம். எனவே அவர்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்.

தியேட்டர்கள் திறக்கப்பட்டதும், தியேட்டருக்கு வருவதற்கு மக்களுக்கு தயக்கம் ஏற்படலாம். அதனால் நடிகர், நடிகைகள் தியேட்டருக்கு வந்து ஒரு காட்சியாவது படம் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களே தியேட்டருக்கு வருகிறார்கள் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்களும் தியேட்டருக்கு வருவார்கள். ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களை தியேட்டர்களில் வெளியிட எங்களுக்கு விருப்பம் இல்லை. சமீபகாலத்தில் ஓடிடியில் 15 தமிழ் படங்கள் வெளிவந்திருக்கிறது. அவைகள் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. இதன் மூலம் தியேட்டர்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஓடிடி தளத்தை பற்றி எங்களுக்கு எந்த பயமும் இல்லை. என்றார்.

Related Stories: