சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ அறிக்கையில் பதற வைக்கும் தகவல்கள்: ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் அலறல் சப்தம் நிற்க விடாமல் விடிய விடிய தாக்கிய போலீஸ்.!!!

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு குற்றப்பத்திரிகையில் நெஞ்சைப் பதற வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குற்றப்பத்திரிகையின் மூலம் சாத்தான் குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் கொடூர  சித்திரவதை பற்றி அம்பலமாகியுள்ளது. ஜூன் 16-ம் தேதி இரவு 7.30 மணியளில் வணிகர்கள் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை சாத்தான்குளம் போலீஸ் கைது செய்தது. காவல் நிலையத்தின் அறையில் ஆடைகளை களைந்து இருவரையும்  காவலர்கள் தாக்கியுள்ளனர்.

இருவரையும் மேஜை மீது குனிய வைத்து பின்புறத்தில் கொடூரமாக காவலர்கள் அடித்துள்ளனர். இருவரையும் திமிறவிடாமல் 3 காவலர்கள் பிடித்துக் கொள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் முத்துராஜா அடித்துள்ளனர். தந்தையையும் மகனையும்  மாறி மாறி காவலர்கள் தாக்கியதில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. ரத்தம் சொட்டச் சொட்ட 2 பேரையும் போலீஸ் கொடூரமாக தாக்கியுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் காயங்களில் இருந்து சிந்திய  ரத்தத்தை இருவரையுமே துடைக்கக் கூறி காவலர்கள் அடித்துள்ளனர். கொடூரமாக தாக்கப்பட்ட காயங்களுடனேயே ரத்தத்தை தங்கள் உடையாலேயே 2 பேரும் துடைத்துள்ளனர்.

ஜூன் 19-ம் தேதி இரவில் தொடங்கி விடிய விடிய 2 பேரின் அலறல் சப்தம் நிற்க விடாமல் காவலர்கள் தாக்கியுள்ளனர். இரண்டு பேரின் ரத்தமும், காவல் நிலைய சுவர்கள், மேஜைகள், லத்திக் கம்புகள், கழிவறைகளில் படிந்துள்ளது. போலீஸ்  அடித்ததில் கொட்டிய ரத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸின் உடைகள் ஈரமாகிவிட்டன. சிதறிக் கிடந்த ரத்தத்தை துடைத்ததால் உடைகள் முழுவதும் ரத்தம் தோய்ந்துவிட்டது. மருத்துவமனைக்கு 2 பேரையும் அழைத்து சென்றபோது  முதல்முறை உடைகளை காவலர்கள் மாற்றி உள்ளனர். மாஜிஸ்திரேட் முன் 2 பேரையும் ஆஜர் செய்யும் முன்பும் 2 பேரின் உடைகளை காவலர்கள் மாற்றி உள்ளனர். காவல் நிலையத்தில் சிதறிக்கிடந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ரத்தத்  துணிகளை தூய்மைப்படுத்தி தடயங்களை மறைக்க போலீஸ் முயன்றுள்ளது.

Related Stories: