கடல்நீர் வெள்ளாற்றில் உட்புகுவதால் 50 கிராம மக்கள் உப்பு நீரை குடிக்கும் அவலம்: ரூ93 கோடி தடுப்புச்சுவர் கட்டும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதால் சிதம்பரம், புவனகிரி ஆகிய இரண்டு தாலுகாக்களை சேர்ந்த 50 கிராம மக்கள் உப்புத் தண்ணீரை ஆண்டாண்டு காலமாக குடித்து வருகின்றனர். அதனால் வெள்ளாற்றில் தடுப்புச்சுவர் கட்டும் திட்டத்தை ரூ.93 கோடி செலவில் நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கை தற்போது வேகமாக வலுத்து வருகிறது. சேலம் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி 193 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, இறுதியில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது வெள்ளாறு. கடலூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் பாசன ஆதாரமாகவும் விளங்கும் வெள்ளாற்றில் கடந்த சில ஆண்டுகளாக உப்பு நீர் தான் ஓடுகிறது. பரங்கிப்பேட்டையில் கடலில் கலக்கும் வெள்ளாற்றின் வழியே கடல் நீர் உட்புகுந்து ஓடுவதால் பல கிலோ மீட்டர்தூரம் வரை தண்ணீர் உப்பாக மாறி விட்டது.

வெள்ளாற்றின் ஒரு கரையில் சிதம்பரம் தாலுகா கிராமங்களும், மற்றொரு கரையை ஒட்டி புவனகிரி தாலுகா கிராமங்களும் உள்ளன. வெள்ளாற்றின் நீராதாரம் பாழாகி தண்ணீர் உப்பாக மாறியதன் விளைவாக இரண்டு தாலுகாக்களிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் உப்பாக மாறி விட்டது. இதனால் இந்த தண்ணீரை பொதுமக்களால் பயன்படுத்த முடியவில்லை. சிதம்பரம் தாலுகாவில் உள்ள பொன்னந்திட்டு, சி.மானம்பாடி, பு.மடுவங்கரை, நஞ்சைமகத்துவாழ்க்கை, புஞ்சைமகத்துவாழ்க்கை, கீழ்அனுவம்பட்டு, கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, கீரப்பாளையம், வடஹரிராஜபுரம், தாதம்பேட்டை, சாக்காங்குடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாகவே குடிநீர் உப்பாகத்தான் உள்ளது.  

இதுபோல் ஆற்றின் மற்றொருபுறம் உள்ள புவனகிரி தாலுகா கிராமங்களான பரங்கிப்பேட்டை, அகரம், அரியகோஷ்டி,

ஆணையாங்குப்பம், பு.முட்லூர், மஞ்சக்குழி, பு.ஆதிவராகநல்லூர், தம்பிக்குநல்லான்பட்டினம், மேல்புவனகிரி, புவனகிரி, பெருமாத்தூர், உடையூர் அழிச்சிகுடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் தண்ணீர் வீணாகி விட்டது. இதனால் பொதுமக்களும், கால்நடைகளும், விவசாயிகளும் மாற்று தண்ணீரை நம்பியே காலத்தைக் கழித்து வருகின்றனர். வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுந்து வரும் நிலையில், அதை தடுப்பதற்காக தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும் என இந்த இரண்டு தாலுகா கிராம மக்களும் சுமார் 10 ஆண்டுகளாகவே கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேறவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியும் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்புச் சுவர் கட்டப்படும் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் இன்றுவரை அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

அதற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதி, வாக்குறுதியாக மட்டுமே இருக்கிறது. வெள்ளாற்றில் புவனகிரி அருகே உள்ள பு.ஆதிவராகநல்லூர் கிராமத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணிக்கான இடம் தேர்ந்து எடுக்கப்பட்டது. இந்த இடத்தில் கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங்பேடி நேரடியாக வந்து இடத்தை ஆய்வு செய்தார். ஆனாலும் இதுவரை இந்தத் திட்டத்திற்கான அனுமதியும் கிடைக்கவில்லை. நிதியும் ஒதுக்கப்படவில்லை.மனிதனின் அடிப்படை தேவைகளில் மிக முக்கியமானது குடிநீர். சுத்தமான குடிநீர் இல்லாததால் 50 கிராம மக்கள் உப்பு நீரை குடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதால், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

‘திட்டத்தை நிறைவேற்றி தருவேன்’

இந்த திட்டத்தின் நிலை குறித்து புவனகிரி தொகுதி எம்எல்ஏ துரை.கி.சரவணனிடம் கேட்டபோது, பு.ஆதிவராகவநல்லூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்புச்சுவர் கட்டும் பணிக்காக சட்டமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன். அமைச்சர் மற்றும் முதல்வர்களுக்கும் இது தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்துள்ளேன். கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். கடலூர் மாவட்டத்தின் கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ககன்தீப்சிங்பேடியையும் நேரில் சந்தித்து இந்த திட்டத்தின் தேவை மற்றும் அவசியம் குறித்தும் வலியுறுத்தி உள்ளேன்.அதுபோல பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் பலமுறை சந்தித்து திட்டத்தை நிறைவேற்றி தருமாறு கேட்டுள்ளேன்.

ஆனால் ஏனோ அரசு இதுவரை இதை கவனத்தில் கொள்ளவில்லை. திட்டத்திற்கு ஒப்புதலும் அளிக்கவில்லை. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நான் இறுதி வரை போராடி வருவது தொகுதி மக்களுக்கு நன்கு தெரியும். எப்படியும் இந்த திட்டத்தை நிறைவேற்றி தருவேன், என்றார்.

‘எந்த நடவடிக்கையும் இல்லை’

புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன் கூறியதாவது: வெள்ளாற்றில் தடுப்புச்சுவர் கட்டக்கோரி புவனகிரி பகுதி பொதுமக்கள் சமூக அமைப்புகள், விவசாய சங்கங்கள், வியாபாரிகள் என அனைவரும் ஒன்றிணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்துள்ளோம். பு.ஆதிவராகநல்லூர் கிராமத்தில் தடுப்புச்சுவர் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. அரசின் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு திட்டம் குறித்தும், அதன் தற்போதைய நிலை, தடுப்பணை கட்டும் பணிகளை துவக்குவது, நிதி ஒதுக்கீடு குறித்து பலமுறை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடிதம் எழுதி கேட்டிருந்தோம் ஆனாலும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும், பணிகளை துவங்குவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

‘உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்’

காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரன் கூறுகையில், வெள்ளாற்றின் குறுக்கே பு.ஆதிவராகநல்லூர் கிராமத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணிக்காக இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிக்காக ரூ.59.38 கோடியும், நிலங்களை கையகப்படுத்துவதற்கு ரூ.33.20 கோடியும் செலவாகும் என திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. கட்டுமான பணிக்கு மட்டுமே நபார்டு வங்கி கடன் உதவி செய்ய முன் வந்த நிலையில், நில ஆர்ஜிதம் பணிக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பு.ஆதிவராகநல்லூர், கீழமூங்கிலடி உள்ளிட்ட கிராமங்களில் நில அளவை செய்து அரசுக்கு கோப்புகள் அனுப்பியும் இதுவரை திட்டத்திற்கு அனுமதியும் வழங்கப்படவில்லை. நிதியும் ஒதுக்கப்படவில்லை. சுமார் ரூ.93 கோடியில் இங்கு கதவணை கட்டி கரைகள் பலப்படுத்தப்பட்டால் 150 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் 3 அடி உயரத்திற்கு 7 கிலோ மீட்டர் தூரம் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாக மாறுவது தடுக்கப்படும். அதனால் இந்த திட்டத்திற்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும், என்றார்.

Related Stories: