ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரே மின் விநியோகம்: சூரிய மின்சார தயாரிப்பில் இந்தியா சாதனை: பிரதமர் மோடி பெருமித பேச்சு

அகமதாபாத்: ‘ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரே மின் விநியோகம்’ என்ற கொள்கையை உலகத்துக்கு காட்டியுள்ள இந்தியா, சூரிய ஒளி மின்சார  தயாரிப்பில் உலகளாவிய சாதனையை படைத்து வருகிறது.’ என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார். குஜராத்தில் வேளாண்மை, மருத்துவம்,  சுற்றுலா ஆகிய துறைகளுக்கான வளர்ச்சித்  திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி  வைத்தார். அப்போது, அவர்  பேசியதாவது:  விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, அவர்களின் உற்பத்தி செலவு, சிரமங்களை குறைக்க, காலத்திற்கேற்ப அரசு  அதிகளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

‘கிர்னார் ரோப் கார் திட்டம்,’ பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இது பயன்பாட்டிற்கு வந்திருந்தால் எத்தனையோ யாத்ரீகர்கள், சுற்றுலா  பயணிகள் பயன் அடைந்து இருப்பார்கள்.  நாட்டில் சூரிய மின்சக்தி திட்டத்தை விவரமான கொள்கைகளுடன், பத்து ஆண்டுகளுக்கு முன்பே  உருவாக்கிய முதல் மாநிலம் குஜராத். கடந்த 2010ம் ஆண்டு பதானில் இத்திட்டம் தொடங்கப்பட்ட போது, ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்  வினியோக அமைப்பு’ என்பதை உலகிற்கு காட்டுவோம் என்று நினைத்து பார்க்கவில்லை. ஆனால், இன்று சூரிய மின்சக்தி உற்பத்தியிலும்,  பயன்பாட்டிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில், உலகளவில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா 5வது இடத்தில்  உள்ளது.

‘கிசான் சூர்யோதயா யோஜனா’ திட்டத்தின் மூலம் காலை 5 மணி முதல் இரவு 9.30 வரை மின்சாரம் கிடைப்பதால் லட்சக்கணக்கான விவசாயிகள்  பயன் அடைவார்கள். மாறி வரும் மாற்றங்களால், இதய சிக்கல்கள் அதிகரிக்கின்றன. அகமதாபாத்தில் உள்ள குழந்தைகளுக்கான இருதய  மருத்துவமனையில் குஜராத், அனைத்து மக்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அறிவிக்கப்பட்ட 3 வளர்ச்சி திட்டங்கள்

* குழந்தைகள் இருதய மருத்துவமனை - 470 கோடி மதிப்பீட்டில் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முதலீட்டில், அகமதாபாத்தில்  உள்ள மேத்தா இருதவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் குழந்தைகள் இருதய மருத்துவமனை பிரிவு அமைய உள்ளது.

* கிசான் சூர்யோதயா யோஜனா திட்டம் - இத்திட்டத்தின் மூலம் காலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை நீர்பாசனத்துக்காக தொடர்ந்து சூரிய  மின்சாரம் வழங்கப்படும். 2023ம் ஆண்டுக்குள் மின் விநியோக உள்கட்டமைப்பை உருவாக்க  3,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* கிர்னார் ரோப் கார் திட்டம் - 2.3 கி.மீ. தூரமுள்ள ரோப் கார் திட்டம், குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள கிர்னார் மலையில்  தொடங்கப்பட்டது. இது, ஆசியாவின் மிக நீளமான புனித தலம் செல்லும் மலைப் பாதையாகும். இத்திட்டம் 130 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.

Related Stories: