861 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு டிசம்பரில் அடிக்கல் நாட்டு விழா: 2022 அக்டோபரில் முடிக்க இலக்கு

புதுடெல்லி: ‘‘புதிய நாடாளுமன்றத்தை கட்டும் பணி டிசம்பரில் தொடங்கி, 2022ம் ஆண்டு அக்டோபரில் முடிக்கப்படும்,’’ என மக்களவை  செயலகம் கூறியுள்ளது. தலைநகர் டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம், ஆங்கிலேய அரசால் எட்வின் லுட்யென்ஸ், ஹெர்பர்ட் பேகர்  ஆகியோரால் வடிவமைத்துக் கட்டப்பட்டது. இந்த கட்டிடப் பணி பிப்ரவரி 12, 1921ம் ஆண்டு தொடங்கி, ஆறு ஆண்டுகளில் முடிந்தது. அன்றைய காலக்  கட்டத்தில் இந்த கட்டுமானப் பணிக்கு ₹83 லட்சம் மட்டுமே செலவு செய்யப்பட்டது. 1927ம் ஆண்டு, ஜனவரி 18ம் தேதி அன்றைய கவர்னர் ஜெனரலாக  இருந்த லார்ட் இர்வினால், இது திறந்து வைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் அடையாளமாக இருக்கும் இந்த நாடாளுமன்ற கட்டிடத்துக்கு குட்பை  சொல்கிறது மத்திய அரசு. ஏறக்குறைய 90 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட மத்திய அரசு முடிவு  செய்துள்ளது.

இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய  வீட்டு  வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடப்பு நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு  எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டப் பணிகளுக்கேற்ற  வகையில் காற்று மாசு, ஒலி மாசு ஆகியவற்றை கவனமாகக் கையாளப் போவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய கட்டிடத்தின் தரத்திலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிப்பதிலும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்று  கண்டிப்புடன் சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். இந்த நாடாளுமன்ற கட்டிடம் டெல்லி ராஜபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில்  அமைகிறது. புதிய கட்டிடப் பணிகள் காரணமாக பிரதமரின் அலுவலகம் மற்றும் வீடு தெற்கு பிளாக்குக்கும், துணை ஜனாதிபதியின் வீடு உள்ள நார்த்  பிளாக்குக்கும் மாற்றப்பட உள்ளது.

* நாடாளுமன்ற புதிய கட்டிடம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்படும் இந்த புதிய கட்டிடம், காகிதமில்லா அலுவலகமாக கொண்டு வர  திட்டமிடப்பட்டுள்ளது.

* புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்தியாவின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அரசியலமைப்பு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

* உறுப்பினர்களுக்கான பிரம்மாண்டமான ஓய்வறை, நூலகம், உணவுக்கூடம், வாகனம் நிறுத்துமிடம் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கான அறை என  அனைத்து வசதிகளும் இருக்கும்.

* தற்போதைய நாடாளுமன்றம் வட்ட வடிவில் அமைந்துள்ளது. புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் அமைக்கப்பட உள்ளது.

* நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் டிசம்பரில் தொடங்கும். 2022ம் ஆண்டு, அக்டோபரில் பணிகள் முடிக்கப்படும்.

* கட்டிடப் பணிகளைக் கண்காணிப்பதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்புக் குழுவில் மக்களவை செயலர், மத்திய வீட்டு  வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், மத்திய பொதுப்பணித் துறை அமைச்சகம், டெல்லி மாநகராட்சி, பொறியாளர்கள்,  வடிவமைப்பாளர்கள் உள்ளனர்.

* புதிய கட்டிடத்தில் அவை உறுப்பினர்கள் 888 பேர் அமரும் வகையில் இருக்கைகள் தயாராகி வருகிறது. தற்போது 543 மக்களவை உறுப்பினர்கள்  உள்ளனர். அதேபோல், மாநிலங்களவைக்கு 384 உறுப்பினர்களுக்கு இருக்கை வசதிகள் அமைக்கப்படுகிறது. தற்போது, மாநிலங்களவைக்கு 245  உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்கால  தேவை கருதி அதிக இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.

* புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான பொறுப்பினை டாடா நிறுவனம் ஏற்றுள்ளது. சுமார் ₹861 கோடி மதிப்பில் இதற்கான ஏலத்தினை டாடா  நிறுவனம் எடுத்துள்ளது.

Related Stories: