மாதாந்திர சம்பளதாரர்கள் வருமான வரி தாக்கல் செய்யடிசம்பர் 31 வரை கெடு நீட்டிப்பு: மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: மாதாந்திர சம்பளதாரர்கள் தங்களின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடுவை, டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து  மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு, பொருளாதார முடக்கம் உள்ளிட்ட தொற்றுநோய் பாதிப்பு காரணங்களுக்காக  2019-20ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு, ஜூலை 31ம் தேதியில் இருந்து நவம்பர் 30ம் தேதி வரை 4  மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த கெடு முடிய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தற்போதுதான் அனைத்து தொழில்துறையை சேர்ந்த  நிறுவனங்களும் வழக்கமான செயல்பாட்டிற்கு வரத் தொடங்கி உள்ளன.

எனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நிதி அமைச்சகம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. இது  தொடர்பாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், ‘வருமான வரி செலுத்துபவர்கள் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு  வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதே போல், தணிக்கை தேவைப்படும் கம்பெனிகள், தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல்  செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 31ல் இருந்து, 2021 ஜனவரி 31க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோரின்  கோரிக்கையை ஏற்று, இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

ஜிஎஸ்டிக்கும் அவகாசம்

சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) ஆண்டு அறிக்கை தாக்கல் செய்வதற்கான கெடுவும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக  மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது. 2018-19ம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கையை தாக்கல்  செய்வதற்கான கடைசி தேதி வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், இதற்கு மேலும் 2 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: