மருத்துவப்படிப்பில் OBC-க்கு 50% ஒதுக்கீடு: நடப்பு ஆண்டு அமல்படுத்தப்படுமா?...நாளை மறுநாள் தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்.!!!

புதுடெல்லி: மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பு அளிக்கிறது. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில்  ஓ.பி.சி பிரிவினருக்கு 50  சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு மற்றும் அதிமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதேபோல், இந்த விவகாரத்தில் மருத்துவர் டி.ஜி.பாபு தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்திற்கு மட்டும் தற்போது தனிப்பட்ட முறையில் இடஒதுக்கீடு வழங்கினால் அது மற்ற மாநிலங்களில் சட்ட சிக்கல்களை  உருவாக்கும் என மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான தீர்ப்பு கடந்த 15ம் தேதி ஒத்தி வைத்ததோடு, இந்த விவகாரத்தில் மனுதாரர், எதிர்மனுதாரர் என அனைவரும் கடந்த அக்டோபர் 20ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாரர் தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் கடந்த 21-ம் தேதி எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். கடந்த 22-ம் தேதி மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீட்டை  அமல்படுத்த வேண்டும் என்றும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கால தாமதம் தேவையில்லாதது. 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்கு குறித்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் வரும் அக்டோபர் 26-ம் தேதி நாளை மறுநாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. எனவே, வரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை  பொருத்து 50% இடஒதுக்கீடு இந்தாண்டு அமல்படுத்தப்படுமா? இல்லை அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து தெரியவரும்.

Related Stories: