வெளிமாநிலத்தில் இருந்து கடத்திய 40 லட்சம் குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை: சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் ஷெசாங் சாய்க்கு வெளிமாநிலத்தில் இருந்து லாரி மூலம் சென்னைக்கு குட்கா பொருட்கள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி துணை கமிஷனரின் தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் மாவட்டம் நயப்பாக்கத்தில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக வந்த லாரியை வழிமறித்து சோதனை நடத்தினர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ₹40 லட்சம் மதிப்புள்ள ஐந்தரை டன் குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் இருந்தது தெரியவந்தது.

உடனே தனிப்படையினர் லாரியில் குட்கா கடத்தி வந்த விருதுநகர் மாவட்டம் மா புதுப்பட்டியை சேர்ந்த முத்துராஜ்(41), விழுப்புரம் மாவட்டம் கண்ணன்காடு பகுதியை சேர்ந்த சிவராஜ்(26), திருவண்ணாமலை மாவட்டம் செல்லான்குப்பத்தை சேர்ந்த அரவிந்தன்(21) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் குட்கா பொருட்களை லாரியுடன் சென்னைக்கு கொண்டு வந்து மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மெரினா போலீசார் வெளிமாநிலத்தில் இருந்து குட்கா கடத்தி வந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து ₹40 லட்சம் மதிப்புள்ள ஐந்தரை டன் குட்கா பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

Related Stories: