திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு எகிப்து வெங்காயம் 100 டன் வந்தது-ஒரு கிலோ ரூ.70

திண்டுக்கல்: வெங்காய விலை ஏற்றம், வரத்து குறைவால் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு எகிப்து வெங்காயம் 100 டன் விற்பனைக்கு வந்தது.

திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கு என தனி மார்க்கெட் உள்ளது. இங்கு பெரிய வெங்காயம் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

ஆனால் தற்போது இந்த 2 மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் பெரிய வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளது. இதனால் பெரிய வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சராசரியாக 5000 மூட்டைகள் விற்பனைக்கு வரும் நிலையில் தற்போது மழையின் காரணமாக 2000 மூட்டைகள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.40க்கு விற்ற பெரிய வெங்காயம் தற்போது ரூ.85 வரை விற்பனையாகிறது. பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பால், சின்ன வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளது.

இதை சமாளிக்க மத்திய அரசு எகிப்து நாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளது.அதன்படி திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டிற்கு நேற்று மட்டும் எகிப்து வெங்காயம் 100 டன் விற்பனைக்கு வந்தது. மார்க்கெட்டில் தற்போது எகிப்து பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100ஐ தாண்டி விற்பனையாகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெங்காய வரத்து மிகவும் குறைந்துள்ளது. தீபாவளி நேரங்களில் வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இந்தியாவில் வெங்காயத்தின் தேவை அதிகளவில் உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாலும் விலை குறைய வாய்ப்பு கிடையாது. கூடுவதற்கே வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

Related Stories: