கம்பத்தோடு பஸ் இயக்கம் ‘கட்’ தனித்தீவானது கூடலூர், லோயர்-ஆட்டோவில் அதிக கட்டணம் கொடுத்து செல்வதால் அவதி

கூடலூர் : குமுளிக்கு இயக்கும் அரசு, தனியார் பஸ்கள் கம்பத்தோடு நிறுத்தி விடுவதாவல் கூடலூர், லோயர்கேம்பிற்கு அதிக கட்டணம் கொடுத்து பொதுமக்கள் ஆட்டோவில் செல்லும் நிலை உள்ளது. எனவே லோயர்கேம்ப் வரை பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தொழிலாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் தமிழக கேரள தேனி- இடுக்கி மாவட்ட எல்லை பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு பகுதிகளுக்கு பஸ் இயக்குவது நிறுத்தப்பட்டது.

மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை போன்ற வெளிமாவட்டங்களிலிருந்து தமிழக எல்லை குமுளி வரை நாள்தோறும் இயக்கப்பட்ட நூற்றுகணக்கான அரசு,  தனியார் பஸ்கள் அனைத்தும் கம்பம், கூடலூர் பகுதியோடு நிறுத்தப்பட்டது. தற்போது இதிலில் பெரும்பாலான பஸ்கள் கம்பத்தோடு நிறுத்தி விடுகின்றனர். இதனால் கூடலூர், லோயர்கேம்ப் பகுதி பஸ் போக்குவரத்து இல்லாமல் துண்டிக்கப்பட்ட தனித்தீவுபோல் உள்ளது. இப்பகுதிக்கு பொதுமக்கள் ஆட்டோவில் அதிக கட்டணம் கொடுத்து செல்கின்றனர். எனவே திண்டுக்கல் மண்டலத்திற்குட்பட்ட குமுளி செல்ல அனுமதி உள்ள பஸ்களை கூடலூர், லோயர்கேம்ப் வரையிலாவது இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கூடலூர் பாண்டியன் கூறுகையில், கூடலூர், லோயர் பொதுமக்கள் வணிக ரீதியாகவும், மருததுவ ரீதியாகவும் அதிகளவு கம்பம் பகுதிக்கு வந்து செல்கின்றனர். கொரோனா ஊரடங்கு துவங்கியதிலிருந்து எல்லை பகுதியான குமுளிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதனால் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கூடலூர், லோயர் பகுதிக்கு சென்ற பஸ்கள் இப்போது ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை செல்கிறது. இதனால் கூடலூர், லோயர் பகுதி மக்கள் ஆட்டோவில் அதிக கட்டணம் கொடுத்து கம்பம் பகுதிக்கு வந்து செல்லவேண்டி உள்ளது’  என்றார்.  

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் கணேசனிடம் கேட்டபோது, ‘தற்போது லோயர்கேம்ப் பணிமனையிலுள்ள 13 அரசு பஸ்களும் லோயர் வரை இயக்கபடுகிறது. கம்பம், தேனி கிளை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து செல்லும் ஒருசில பஸ்கள் கூடலூர், லோயர் வரை இயக்கப்படுகிறது. கூடுதலாக பஸ்கள் இயக்குவது குறித்து கிளை மேலாளர்களுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: