'தமிழக அரசின் துரித நடவடிக்கையால் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது!” - முதல்வர் பழனிசாமி பேச்சு

புதுக்கோட்டை: கொரோனா வைரசை வல்லரசு நாடுகளில் கூட கட்டுப்படுத்த முடியவில்லை; தமிழக அரசின் கடுமையான முயற்சியால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். மேலும் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து முதல்வர் ஆய்வு கூட்டத்தில் பேசினார். அப்போது; கொரோனா வைரசை வல்லரசு நாடுகளில் கூட கட்டுப்படுத்த முடியவில்லை; தமிழக அரசின் கடுமையான முயற்சியால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் நோய் பரவல் குறைந்துள்ளது. கொரோனா தடுப்பு பணியில் அரசு அதிகாரிகள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவ நிபுணர்கள் நோய் பரவலை கட்டுப்படுத்தி வருகின்றனர். காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதன் விளைவாக பெரும் அளவு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் சேமித்து வைப்பதற்காகவே குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. வேளாண் மண்டல அறிவிப்பு மூலம் விவசாயிகளை காத்த அரசு அதிமுக அரசு. 2020ம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் பெறும். ஐடிசி ஆலையில் அதிக அளவில் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறோம்; 4,5 ஆண்டுகளில் புதுக்கோட்டை பசுமையான மாவட்டமாக மாறும் எனவும் கூறினார்.

Related Stories: