தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையருடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பான இந்திய தலைமை தேர்தல் ஆணையருடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் (நவம்பர்) 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 15ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. முன்னதாக நவம்பர் மாதம் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுவதையொட்டி நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி கலந்து கொண்டார். அப்போது, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 16ம் தேதி வெளியிடுவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதை விளக்கி கூறினார். மேலும், காலியாக உள்ள கன்னியாகுமரி எம்பி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Stories: