திருப்போரூர் பகுதியில் நிதி ஒதுக்கி 14 ஆண்டுகள் ஆகியும் அமைக்கப்படாத நீதிமன்றம்: விரைந்து பணிகளை தொடங்க வழக்கறிஞர்கள் கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் பகுதியில் நிதி ஒதுக்கி 14 ஆண்டுகள் ஆகியும் நீதிமன்றம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனை விரைந்து துவங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு வட்டத்தில் இருந்து 70 கிராமங்கள் தனியாக பிரிக்கப்பட்டு திருப்போரூர் வட்டம் கடந்த 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் எல்லையில் அடங்கிய திருப்போரூர், கேளம்பாக்கம், தாழம்பூர், மானாம்பதி, காயார் ஆகிய காவல் நிலையங்களும், சென்னை காவல் எல்லையில் அடங்கிய கானத்தூர் காவல் நிலையமும் அமைந்துள்ளது.

இந்த காவல் நிலையங்களில் அடங்கிய சட்ட விரோத நிகழ்வுகள், குற்றச் சம்பவங்கள், சிவில் வழக்குகள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், அரசு ஊழியர்கள், காவலர்கள் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சென்று வழக்குகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், திருப்போரூர் வட்டத்தில் உள்ள 70 கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய வட்டங்களில் வட்ட அளவிலான நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுகின்றன. அதேபோல், திருப்போரூரில் நீதிமன்றம் தொடங்குவதற்கு, கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பணி தொடங்கப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யவும், திட்ட அறிக்கை தயார் செய்யவும் நிதி ஒதுக்கப்பட்டது.

மேலும் கடந்த 2012ம் ஆண்டு திருப்போரூர் பேரூராட்சியில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது.ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இத்திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக போய்விட்டது. தற்போது கேளம்பாக்கம், தாழம்பூர் போன்ற காவல் நிலையங்களில் குற்றவாளிகளை செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து செல்வதால் காலவிரயமும், பாதுகாப்பு குறைபாடும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி திருப்போரூரில் இருந்து தாம்பரம் வழியாக புழல் சிறைச்சாலைக்கு செல்ல வெளி வட்டச்சாலை வசதி உள்ளது. திருப்போரூரில் நீதிமன்றம் அமைந்தால் குற்றவாளிகளை கையாள்வதில் கால விரயம் தவிர்க்கப்படும். எனவே, திருப்போரூரில் புதிய நீதிமன்றம் தொடங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: