மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க இளைஞர்களை கொண்ட கிராம சுற்றுக் காவல் குழு

காஞ்சிபுரம்: இளைஞர்கள், சமுதாய பொறுப்புகளை உணர்ந்து, தங்களது பகுதியில் நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுத்தல், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் நோக்கோடு காவல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிராம சுற்றுக் காவல் குழுவை, எஸ்பி சண்முகப்பிரியா, நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது. மாவட்டத்தில் அதிக குற்ற சம்பவங்கள் நடப்பதாக 107 தாய் கிராமங்கள், 17 குக்கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு 4 இளைஞர்களை தேர்வு செய்து, 5 கிராமங்களை உள்ளடக்கி ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள இளைஞர்கள், போலீசாருடன் இணைந்து இரவு 12 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இதில் இணைந்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் 4 சிப்காட் தொழிற்சாலைகளில் அவர்களது தகுதிக்கு ஏற்ப வேலைவழங்க, தொழிற்சாலைகளின் நிர்வாக அதிகாரிகளுடன் பேசப்பட்டுள்ளது என்றார். டிஎஸ்பிக்கள் காஞ்சிபுரம் மணிமேகலை, பெரும்புதூர் கார்த்திகேயன், தனியார் தொழிற்சாலை மனிதவள மேம்பாட்டு அதிகாரி புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: